search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்புகள் தானம்"

    சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்க்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஷில்பா வீட்டிற்கே சென்று வழங்கினார். #TirunelveliCollector
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம்‌ டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இதனால் பழனிக்குமார் தனது தாயார் சாரதாவுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாயார் சாரதா சம்மதம் தெரிவித்தார்.

    இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு இதயத்தையும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மற்றொரு சிறுநீரகமும், திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நோயாளிக்கு கல்லீரலும் தானமாக வழங்கப்பட்டது.

    சாரதாவின் கணவர் கணபதி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பழனிக்குமார் மட்டுமே உழைத்து தாயை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பழனிக்குமாரும் இறந்ததால் தனக்கு தமிழக அரசு முதியோர் பென்சன் வழங்கவேண்டும் என்று சாரதா நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் மனு கொடுத்தார்.

    அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் உடனடியாக சாரதாவுக்கு முதியோர் பென்சனை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து இன்று காலை சாரதாவின் வீட்டுக்கு நேரில் சென்ற கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சாரதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அரசின் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை சாரதாவிடம் கலெக்டர் நேரடியாக வழங்கினார்.  #TirunelveliCollector 
    பெங்களூரில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இறந்தவரின் இரு கைகளை புதுவை வாலிபருக்கு பொருத்தி ஜிப்மர் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் தொழிற்சாலை ஒன்றில் நடந்த விபத்தில் 31 வயது வாலிபர் ஒருவர் இரு கைகளையும் இழந்தார்.

    அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாற்று கை பொருத்துவதற்கு டாக்டர்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பெங்களூரில் 22 வயது பீகார் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    அவருடைய நிலைமை மோசமானதை அடுத்து 16-ந் தேதி நாராயணா ஹெல்த் சிட்டி என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மூளைசாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வாலிபருக்கு பெங்களூர் விபத்தில் இறந்த வாலிபரிடம் இருந்து இரு கைகளையும் தானம் பெற முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு சம்மதம் கிடைத்தது.

    அதை தொடர்ந்து பெங்களூர் வாலிபரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு ரசாயனங்கள் கலந்து ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டது.

    ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடனே ஏற்றி புதுவைக்கு கொண்டு வந்தனர். நேற்று பகல் 12.15 மணிக்கு பெங்களூரில் இருந்து அந்த வாகனம் புறப்பட்டது.

    புதுவைக்கும், பெங்களூருக்கும் இடைப்பட்ட தூரம் 300 கி.மீட்டர். இந்த தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து 4.15 மணிக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வாகனம் வந்து சேர்ந்தது.

    இங்கு அந்த கைகளை பொருத்தி ஆபரேசன் செய்வதற்காக 7 டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    கைகள் வந்ததும் அவர்கள் புதுவை வாலிபருக்கு அவற்றை பொருத்தினார்கள். நீண்ட நேரம் ஆபரேசன் செய்து கை பொருத்தப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    பெங்களூர் வாலிபரின் இதயம், இதய வால்வுகள், சிறுநீரகம், ஈரல், கண்கள் ஆகியவையும் தானமாக கொடுக்கப்பட்டன.

    அதில் இதயத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு பொருத்தினார்கள். ஈரல் பெங்களூரை சேர்ந்த 67 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. அவரது ஈரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருந்தது.

    சிறுநீரகம் மைசூரில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

    பெங்களூர் வாலிபர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை காவலாளியாகவும், தாயார் கூலித்தொழிலாளியாகவும் இருந்து வந்தனர்.

    இந்த குடும்பத்தில் அடுத்தடுத்து சோகங்கள் நடந்தன. ஏற்கனவே வாலிபரின் உடன் பிறந்தோர் 3 பேர் இறந்து விட்டனர். கடைசியாக இருந்த இவரும் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுவையில் கைகள் பொருத்தப்பட்ட அந்த நபரின் விவரங்களை இதுவரை ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிடவில்லை. #tamilnews
    விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் பூவரசன் (வயது 27). உதவி பேராசிரியர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்தநிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து பூவரசனின் தந்தை சுப்ரமணியன், தாய் செல்வி மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பூவரசனின் உடலை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாரி விஜயராகவன், மகேஸ்வரன் பிச்சைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பூவரசனின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பிற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு அனுப்பிவைத்தனர்.

    அதன்படி ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி கூறும் போது, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் இடையே அதிக விழிப்புணர்வு தேவைப்படு கிறது. ஒருவர் இறந்தபிறகு அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும். விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூவரசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவருடைய குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர் என்றார். 
    கீழ்கட்டளையில், சாலையை கடந்து செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த வாலிபர், மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்திநகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(வயது 37). இவர், கீழ்கட்டளையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு உணவகத்தின் அருகே மேடவாக்கம் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அலெக்சாண்டரும், அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கண்ணன் என்பவரும் காயம் அடைந்தனர்.

    அலெக்சாண்டர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணன், அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலெக்சாண்டர், மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து வாலிபரின் உடலில் இருந்து இருதயம், கணையம், சிறுநீரகம் உள்பட 5 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேருக்கு பொருத்தப்பட்டது.

    மூளைச்சாவு அடைந்த அலெக்சாண்டருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், அன்பரசி(7) என்ற மகளும், ஆதர்ஸ் விஷ்வா(5) என்ற மகனும் உள்ளனர். மூளைச்சாவு அடைந்த அலெக்சாண்டர் ஆலந்தூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் துரைவேலுவின் அண்ணன் மகன் ஆவார். #tamilnews
    ×